Monday, July 12, 2010

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? அல்லாஹ்வைக் காண முடியுமா?

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன... 5:64

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். 55:27

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, 89:22
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். 68:42

மேற்காணும் 68:42 வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது.

...மறுமையில் அல்லாஹ் முஃமின்களுக்குக் காட்சி தர நாடி தன் கணுக்காலின் திரையை விலக்குவான். அப்போது இம்மையில் அவனுக்கு மட்டுமே சிரம் பணிந்தவர் அனைவரும் சிரம் பணிவர், மற்றவர்கள் அனைவரும் சிரம் பணிய முடியாத அளவுக்கு அவர்கள் முதுகெலும்பு வளையாது நின்றுவிடும். அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி): புகாரி.

திருமறை மற்றும் நபிமொழி மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை அறிகிறோம். எனினும் திருமறை, நபிமொழியில் உள்ளதை அப்படியே நம்ப வேண்டும். மேல்மிச்சமான கற்பனைக்கோ, நம் சொந்த யூகத்திற்கோ சிறிதும் இடமளிக்கக் கூடாது. அல்லாஹ் தனது திருமறையில் (42:11, 112:4 ஆகிய வசனங்களில்) அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுகிறான் ஆகவே நம் அறிவைப் பயன் படுத்தாமல் அப்படியே ஏற்க வேண்டும்.

அல்லாஹ்வைக் காண முடியுமா?

திருமறை மற்றும் நபி மொழிகளின் ஒளியில் சிந்தித்தோமானால் இவ்வுலக(இம்மை) வாழ்வில் இது நாள் வரை (நபிமார்கள் உட்பட) யாருமே பார்த்ததில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (6:103)
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார். (7:143)

அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)

மூன்று விஷயங்களைக் கூறுபவர் நபி(ஸல்)அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறிவிட்டார் என்று கூறிவிட்டு அதில் ஒன்றாக நபி(ஸல்)அவர்கள் மிஃராஜில் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறுவது என்றார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் சுருக்கம் - நூல்: முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை இந்த ஹதீஸின் மூலம் மிகத் தெளிவாக அறிகிறோம்.

அல்லாஹ்வை மறுமையில் காண முடியும்


அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். (75:22,23)


அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. (50:35)

50:35 வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அதிகம் என்பது அல்லாஹ்வை காண்பதையே குறிக்கும் என்று கூறினார்கள்.


நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்பொழுது நபியவர்கள் முழு நிலவைப் பார்த்தார்கள். பிறகு கூறினார்கள் நிச்சயமாக நீங்கள் இச்சந்திரனைப் பார்ப்பதுபோல உங்கள் இரட்சகனை மறுமையில் பார்ப்பீர்கள். அவனைப் பார்ப்பதில் எந்தத்தடையும் இருக்காது. நீங்கள் சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள (ஃபஜ்ர்) தொழுகையையும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள (அஸர்) தொழுகையையும் பேணி வாருங்கள். ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

No comments:

Post a Comment